search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சியோல் அமைதி விருது"

    இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தென் கொரியாவின் உயரிய விருதான சியோல் அமைதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. #ModiInSeoul #SeoulPeacePrize
    சியோல்:

    இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உலக அமைதிக்குப் பங்களிப்பை வழங்கியமைக்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு, தென் கொரிய நாட்டின் உயரிய விருதான சியோல் அமைதி விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், தற்போது 2 நாள்கள் சுற்றுப்பயணமாக தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இன்று சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மோடியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் அடங்கிய குறும்படமும் திரையிடப்பட்டது.

    விருதை பெற்ற பின்பு பேசிய பிரதமர் மோடி, இந்த விருது தனிப்பட்ட முறையில் தனக்காக வழங்கப்பட்டது இல்லை என்றும், 130 கோடி இந்தியர்களை இந்த விருது சாரும் என்றும் தெரிவித்தார்.



    உலக அமைதிக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருபவர்களைப் பாராட்டும் நோக்கில், கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் சியோல் அமைதி விருதை, தென் கொரிய அரசு வழங்கி வருகிறது. ஐ.நா.-வின் முன்னாள் பொதுச்செயலர் கோபி அன்னான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் உள்ளிட்டோர் இதற்கு முன்பு இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்த விருதைப் பெற்றுள்ள 14-வது நபர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக தென் கொரிய அதிபரை மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய-தென்கொரியா இடையே தொழில், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசினர். முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக  அமைந்ததாகவும், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும் மோடி குறிப்பிட்டார். #ModiInSeoul #SeoulPeacePrize
    இந்திய, சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளுக்கு தென் கொரியா நாட்டின் மிக உயரிய சியோல் அமைதி விருதுக்கு பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். #Modiawarded #SeoulPeacePrize
    சியோல்:

    தென் கொரியா நாடு கடந்த 1990-ம் ஆண்டில் 24-வது ஒலிம்பிக் போட்டிகளை தலைநகர் சியோலில் வெகு சிறப்பாக நடத்தியது.

    இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றிய உலக தலைவர்களுக்கு ஆண்டுதோறும் சியோல் அமைதி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான விருதுக்கு உலகில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 1300 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இப்பரிசுக்கு தேர்வாகியுள்ளார்.



    இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளால் தூய்மையான அரசை உருவாக்கியதற்காகவும் உலக நாடுகளுடன் நட்புறவை பாராட்டி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், உலக நாடுகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்ததற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுவதாக சியோல் அமைதி பரிசு குழு தெரிவித்துள்ளது.

    மேலும், சமூகப் பொருளாதார அமைப்பில் மாற்றத்தை உண்டாக்கி பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு உதவியாக மோடி அரசின் கொள்கைகள் அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. #Modiawarded #SeoulPeacePrize
    ×